

நம் நாட்டின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை உலகம் அங்கீகரிக்கச் செய்யும் பணியில் இறங்கியுள்ள பிரதமர் மோடி, அவற்றை முறைப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, “யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் இதுவரை எந்த சட்டமும் இல்லை. கடந்த 2006-ம் ஆண்டு இதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இந்திய மருத்துவ கவுன்சிலில் கிளம்பிய எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அந்த முயற்சி தற்போது பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் விவேகா னந்தா யோகா அனுசந்தனா சம்ஸ்தானா என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தர் எச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சி, முறைப்படுத்துதல், பயிற்றுவித்தல், அங்கீகாரம் அளித்தல், பலன் பெறுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்க இருக்கிறது” என்றனர்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை இந்திய மருத்துவ கவுன்சிலின் கீழ் சேர்க்க வேண்டும் அல்லது தனியாக ஒரு கவுன்சில் ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கோரிக்கை எழுந்தது. இதையொட்டி நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த அறிக்கையில், “நம் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சித்தா, ஆயுர் வேதம், யுனானி ஆகிய மருத்துவங் களுக்கு உள்ளது போல், ஒரு பொதுவான முறை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இல்லை. இதனால் அவ்விரண்டையும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இயலாது” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இத்துறைகளில் முறையாகப் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிகம் இல்லை என்றும் காரணம் கூறப்பட்டது. ஆனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை அறிந்தவர்கள் பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் முயற்சியால் இவற்றுக்கு விரைவில் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதுடன் சட்டப்படி முறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.