

பிஹாரில் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் அந்த மாநில பாஜக எம்எல்ஏ, இரண்டு முன்னாள் எம்பிக்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டில் பிஹாரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரணம் கோரி 1998 ஆகஸ்ட் 11-ம் தேதி சீதாமர்ஹி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் அரசியல் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறை வெடித்தது. ஆட்சியர் அலுவலகத்தை ஆர்ப் பாட்டக்காரர்கள் சூறையாடினர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராம் சாரித்ரா ராய் எம்எல்ஏ உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஆட்சியர் ராம் நந்தன் பிரசாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரேஷ் சக்சேனா உட்பட 22 அரசு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 60 பேர் மீது கொலைமுயற்சி, அரசு அலுவலகத்தை சூறையாடியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சீதாமர்ஹி நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றது. இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 45 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 15 பேர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2-ம் தேதி நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாரிஹர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராம் நரேஷ் யாதவ், முன்னாள் எம்பிக்கள் கிஷோர் ராய் (ஐக்கிய ஜனதா தளம்), முகமது அன்வர்உல் ஹக் (ராஷ்டிரிய ஜனதா தளம்) உட்பட 14 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பால் பாஜக எம்எல்ஏ ராம் நரேஷ் யாதவின் பதவி பறிபோயுள்ளது. பிஹாரில் கடந்த 2013-ம் ஆண்டில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ் சர்மா ஆகியோர் எம்.பி. பதவிகளை இழந்தனர். அந்தப் பட்டியலில் ராம் நரேஷ் யாதவும் சேர்ந்துள்ளார்