Last Updated : 11 Jun, 2015 08:44 PM

 

Published : 11 Jun 2015 08:44 PM
Last Updated : 11 Jun 2015 08:44 PM

ஆசியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசை: இந்தியாவுக்குப் பின்னடைவு

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆசியப் பல்கலைக்கங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. மாறாக, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

'டைம்ஸ் உயர் கல்வி ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2015' பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவை முறையே 37 மற்றும் 38வது இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட ஆறு இடங்கள் கீழிறங்கி உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ரூர்கி, பாம்பே, டெல்லி, கரக்பூர் மற்றும் மெட்ராஸ் ஐஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை 'டாப் 100' இடங்களுக்குள் இடம்பிடித்திருந்தாலும், தரவரிசையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பல இடங்கள் கீழிறங்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, டோக்கியோ பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், ஹாங்காங் பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன.

தவிர 'டாப் 20' பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஜப்பான், ஹாங்காங் மற்றும் கொரியா ஆகியவற்றில் இருந்து தலா மூன்று பல்கலைக்கழகங்களும், சீனா மற்றும் துருக்கியில் இருந்து தலா இரண்டு பல்கலைக்கழகங்களும் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து இந்த தரவரிசையின் ஆசிரியர் பில் பேட்டி கூறும்போது, "இதன் மூலம் இந்தியா தனது கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக மிக அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதும், மற்ற நாடுகளுடன் தனது கல்வித் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் தெரிய வருகிறது. இல்லையெனில், இந்தப் பட்டியலில் இருந்து இந்தியா வெளியேற்றப்படுவதற்கான நிலை ஏற்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x