

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட போதிலும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதுதான் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அனைத்து குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் மீது அப்போது ஆட்சியில் இருந்த இவர் கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா தது ஏன்? பிரிட்டனுக்குச் சென்ற லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவராதது ஏன்?
லலித் மோடி மனைவியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மனிதாபிமான அடிப்படையில்தான் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத் துள்ள காங்கிரஸ் கட்சி, லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைத்ததாகக் கூறியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பிரிட்டன் நிதி அமைச்சரை சந்தித்துப் பேசியதுடன், 2 முறை கடிதம் எழுதியதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும் போது, “சுஷ்மா பதவி விலகும் பேச் சுக்கே இடம் இல்லை. இதுதொடர் பான காங்கிரஸ் கட்சியின் கனவு நனவாகாது” என்றார்.
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாஜகவும் மத்திய அரசும் முழு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால், லலித் மோடிக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைப்பதற்காக ரகசியமாக உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக பாஜகவினர் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
வசுந்தரா ராஜேவின் குடும்ப நண்பரான லலித் மோடி, ராஜேவின் மகனும் எம்பியுமான துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமான நிறுவனத் தில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.