

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற நிறுவனங்கள் தயாரிக்கும் நூடுல்ஸ்களான மக்ரோனி, பாஸ்தா உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் தர பரிசோதனைக்கு உட்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவுசெய்துள்ளது.
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி இப்போது பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உணவுப் பொருள் பாதுகாப்பு, தர ஆணை யத்தின் தலைமை செயல் அதிகாரி யுத்விர் சிங் மாலிக் நேற்று கூறிய தாவது:
நூடுல்ஸ் தர பரிசோதனையை ஒரு பிராண்டுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளமாட்டோம். இதர பிராண்டு நூடுல்ஸ்கள், பாஸ்தா, மக்ரோனி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் மாதிரியை சேகரித்து வருகிறோம். இவற்றையும் தர பரிசோதனைக்கு உட்படுத்துவோம்.
விற்பனை செய்வதற்காக தர ஆணையத்திடம் ஒப்புதல் பெற் றுள்ள அனைத்து பிராண்டுகளின் நூடுல்ஸ்களின் பெயர்களும் திங்கள்கிழமை வெளியிடப்படும் இந்த பிராண்டு பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோ தனைக்கு அனுப்பப்படும்.
உரிய ஒப்புதல் பெறாமல் நூடுல்ஸ் உள்ளிட்டவற்றை விற் பனை செய்ய அனுமதி இல்லை. அப்படி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்புதல் பெறாமல் ஏராளமான பிராண்டு பொருள்கள் விற்கப்படுவதாக தெரிகிறது. இப்போதைய நிலை யில் விளம்பரத் தூதர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்க வில்லை. எனினும் அவர்கள் மீத நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முடியும். நூடுல்ஸ்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் பொருள்கள் பற்றி விளம்பர தூதர்கள் விவரம் தெரியாமல் இருக்கலாம். எனினும் அவர்களுக்கு இவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மேலும் தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருள்கள் பற்றி முழு விவரத்தையும் விளம்பர தூதர்கள் அறிந்துகொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
மேகி நூடுல்களில் மோனோ சோடியம் குளூடாமேட் உப்பு மற்றும் காரீயம் இருப்பது முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது. மேகி விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீதி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மேகிக்கு தடை
பெங்களூரு
கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யூ.டி. காதர் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதைப் பற்றி பயப்படத் தேவையில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கர்நாடக மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மேகி நூடுல்ஸுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.
எனவே மைசூரு அருகே நஞ்சன்கூட்டில் செயல்பட்டுவரும் மேகி நூடுல்ஸ் நிறுவனத்தில் மேகி தயாரிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் கடைகளில் உள்ள மேகியை உடனடியாக திரும்ப பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் இல்லை என நிரூபித்த பிறகு தடை விலக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.