

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அவரது சகோதரரும் பாஜக வேட்பாளருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அவரது சகோதரரும் பாஜகவைச் சேர்ந்தவருமான வருண் காந்தி உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் இருந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இவர் தற்போது பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். பிலிபிட்டில் இம்முறை மேனகா காந்தி போட்டியிடுவார் என்பதால் அத்தொகுதிக்கு பதிலாக சுல்தான்பூர் வருணுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வருண் காந்தி, "அரசியலில் சில கோட்பாடுகளை பின்பற்றுகிறேன். அவற்றை எப்போதும் மீறமாட்டேன். எனவே ராகுலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை" என்றார்.