

போலி கல்விச் சான்றிதழ் அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் தனது ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார். நான்கு நாள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் மனுவை தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“நான்கு நாள் போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அமர்வு நீதிமன்றத்தில் உள்ள ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். போலீஸ் காவலுக்கான கெடு முடிவடைந்ததும், பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து கொள்கிறோம்” என தோமர் தரப்பில் கோரப்பட்டது.
கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விமல் குமார் யாதவ், தோமர் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அதேசமயம் காவல்துறை தரப்பின் பதிலையும் கேட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தவ், இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, தோமரின் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.