டெல்லி ராஜபாதையில் சர்வதேச யோகா தினம்: 2 கின்னஸ் உலக சாதனைகளை படைத்தது

டெல்லி ராஜபாதையில் சர்வதேச யோகா தினம்: 2 கின்னஸ் உலக சாதனைகளை படைத்தது
Updated on
1 min read

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதை பகுதியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா நிகழ்ச்சி 2 வகையில் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக, ஒரே இடத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யோகா பயிற்சி வழங்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், என்சிசி படையினர், ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, “டெல்லி ராஜ பாதையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்துகொண்டனர். இதன் மூலம் இந்த நிகழ்ச்சி 2 உலக சாதனைகளை படைத்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் அதிக நாடுகளைச் சேர்ந்த மற்றும் அதிகம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்ற சாதனைகளை படைத்துள்ளது” என்றார்.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி கூறும்போது, “35 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 37 ஆயிரம் யோகா மேட்கள் வழங்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பலர் பங்கேற்க விரும்பி வரிசையில் காத்திருந்ததாகவும் ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in