யோகா நிகழ்ச்சியில் அன்சாரியை புறக்கணித்தது பாஜக அரசு: காங்கிரஸ் விமர்சனத்தால் வலுக்கும் சர்ச்சை

யோகா நிகழ்ச்சியில் அன்சாரியை புறக்கணித்தது பாஜக அரசு: காங்கிரஸ் விமர்சனத்தால் வலுக்கும் சர்ச்சை
Updated on
2 min read

டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியை பாஜக அரசு புறக்கணித்துவிட்டதாக, காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஹமீத் அன்சாரி கலந்துகொள்லாதது குறித்து பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் எழுப்பிய கேள்வி ஒன்றால், இந்தப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை, பிரிவினை அரசியல் என ஆளும் கட்சி மீது காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது, இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.

ராம் யாதவ் கிளப்பிய சர்ச்சை

முதல் சர்வதேச யோகா தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 35,000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சி குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கேள்வி எழுப்பினார். "இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கலந்துகொள்ளாதது ஏன்?" என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் நிரம்பின.

இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் காரணமாக, உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி, அந்தப் பதிவை நீக்கிய ராம் யாடஹ்வ், "அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை" என்று சிறு விளக்கப் பதிவு ஒன்றை இட்டார்.

அன்சாரிக்கு அழைப்பு இல்லை: குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகம்

இந்த சர்ச்சை வலுவான சூழலில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.

அதில், 'அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருப்பது தவறு. யோகா நிகழ்ச்சிக்கு அவருக்கு அழைப்பு விடுக்காததால்தான் அவர் கலந்துகொள்ளவில்லை' என்று விளக்கம் தரப்பட்டது.

அழைப்பு விடுக்காதது ஏன்? - மத்திய அரசு

துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விளக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியன் காரணமாக, இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறும்போது, "நெறிமுறைப்படி பிரதமர் தலைமை விருந்தினராக கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்வது சரியாக இருக்காது. அதனால்தான் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

அன்சாரி கலந்துகொள்ளாதது பற்றி ராம் மாதவ் கேள்வி எழுப்பியது தவறுதான். எனினும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்" என்றார் அவர்.

பிரிவினை அரசியல்: காங்கிரஸ்

இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ், இந்த சர்ச்சையை பாஜகவின் பிரிவினை அரசியல் என்று விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்பிஎன் சிங் கூறும்போது, "யோகா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். யோகா என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும், இந்த விஷயத்திலும் பாஜக பிரிவினை அரசியலில் ஈடுபடுகிறது. இந்த விஷயத்தில் ராம் மாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

அதேவேளையில், மத்திய அரசின் விளக்கம் பொருத்தமாக இருப்பதால் இந்தப் பிரச்சினை இத்துடன் முடிந்துவிட்டது என குடியரசு துணைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in