

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் கைது செய்யப்பட்டார். இத்தகவலை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் போலி கல்விச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (திங்கள்கிழமை இரவு) அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரை ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் வைத்துள்ளோம். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420, 467, 468, 120 பி ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி கூறும்போது, "நான் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தேன். முழு விவரங்களையும் தெரிந்து கொண்டே பதிலளிக்க முடியும்" என்றார்.
தோமர் கைது செய்ய டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
டெல்லியின் சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் (வயது 48) கல்வி சான்றிதழ் போலியானது என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ்குமார் சர்மா என்பவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.
இதை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், தோமர் சட்டம் பயின்றதாகக் கூறிய பிஹாரில் உள்ள திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைகழகத்திற்கு அவரது சான்றிதழை உறுதிபடுத்தும்படி கூறி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கான தம் பதிலை அனுப்பிய பாகல்பூர் பல்கலைகழகம், தோமர் அங்கு கல்வி பயின்றதற்கான சான்றுகள் இல்லை எனவும், அவரது கல்வி சான்றிதழின் சீரியல் எண் 3687, கடந்த ஜூலை 29, 1999 –ல் சஞ்சய்குமார் சௌத்ரி என்ற மாணவருக்கானது என்றும் பதில் அனுப்பியுள்ளது. இதனால், தோமரின் சட்டக் கல்வி பயின்றதாக சமர்பித்துள்ள சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பதவி விலகச் சொல்லி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், ஜிதேந்திர சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் சிங், "அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி போலீஸார் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் வருவதால், மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெல்லியில் ஆட்சியில் இல்லாமலும் மறைமுக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.