

ஒரு மசால் தோசையின் விலை ரூ.6, மட்டன் கறிக்கு விலை ரூ.20 என்றால் நம்பமுடிகிறதா?. நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் நமது நாடாளுமன்ற கேன்டீனில் எம்.பி.க்களுக்குதான் இந்த விலையில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற கேன்டீனுக்கு ரூ.60.7 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இத்தகவல் பெறப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து வரும் அரசு, நாடாளுமன்ற கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தை மட்டும் குறைக்க முயற்சிக்கவில்லை. ஆண்டு தோறும் மானியம் அதிகரித்தே வருகிறது.
லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, நாடாளுமன்றம் நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகை களை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமள வில் மானியமாக வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் எம்.பி.க்கள் சாப்பிடும் உணவுகளின் விவரமும் வெளியாகியுள்ளது. 25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை, 18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட், 4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள், 33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளு மன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக பட்சமாக 150 சதவீதம் வரை மக்களின் வரிப்பணம் மானியமாக செல்கிறது.
இந்த கேன்டீனை வடக்கு ரயில்வே நடத்தி வருகிறது. இதற்கு வழங்கப்படும் மானியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறதே தவிர குறைய வில்லை.
நாடாளுமன்ற கேன்டீன் வரலாற்றில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கே உயர்ந்துள்ளது.