

மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் எடுத்து வருவதற்காக ஒருவரே பல பெண்களை திருமணம் செய்யும் அவலம் நீடிக்கிறது.
பருவமழை பொய்த்துள்ளதால் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி தாண்டவ மாடுகிறது. அங்கு சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெகு தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக ஒருவரே பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது.
தானே மாவட்டம், ஷாகாபூர் தாலுகாவில் டென்கான்மல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சகாராம் பகவத் (65). இவருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவியை மட்டுமே அவர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ளார்.
அவரது கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீர் கொண்டு வருவதற்காக அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துள்ளார். இதுகுறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறி யிருப்பதாவது:
நான் தினக்கூலியாக பணியாற்றி வருகிறேன். எங்கள் கிராமத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. வெகுதொலைவில் உள்ள மலைப் பகுதியில் இரண்டு கிணறுகள் உள்ளன.
அந்த கிணறுகளில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இரண்டு கிணறு களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். ஒரு குடம் தண்ணீர் பிடிக்கவே சில மணி நேரம் ஆகிவிடும்.
எனது முதல் மனைவி சமையலையும் குழந்தைகளையும் கவனித்து கொள்வார். குடிநீர் எடுக்கச் செல்ல அவருக்கு நேரம் இல்லை. எனவே அடுத்தடுத்து இரண்டு பேரை திருமணம் செய்தேன். அவர்கள் இருவரும் வீட்டுக்குத் தேவையான தண்ணீரை கொண்டு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சகாராம் பகவத் மட்டுமன்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும் பாலான ஆண்கள், குடிநீர் சுமப் பதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய் துள்ளனர். பலதார மணத்துக்கு தடை இருந்தாலும் மகாராஷ்டிரா வின் பெரும்பாலான கிராமங்களில் அண்மைகாலமாக `தண்ணீர் மனைவிகளின்’ எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த சமூக அவலத்துக்கு மகாராஷ்டிர அரசு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண் டுள்ளனர்.