

கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் நேற்று ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாம்ஷெட் பூர் கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் ரகுவர் தாஸ் போட்டி யிட்டார். அப்போது ஒரு கோயி லுக்கு அருகே கட்சி அலுவல கத்தை மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதியின்றி திறந்துள்ளார். இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக ரகுவர் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சம்மன் அனுப்பி யதையடுத்து, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஜி.கே.திவாரி முன்பு ரகுவர் தாஸ் நேற்று ஆஜரானார். சிஆர்பிசி 313-வது பிரிவின் கீழ் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் நந்த் கிஷோர் மிஸ்ரா மற்றும் தேவேந்திர சிங் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் அடுத்த விசா ரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாஜகவின் ஜாம்ஷெட்பூர் மஹாநகர் குழுவின் முன்னாள் தலைவர் சந்திரசேகர் மிஸ்ரா மற்றும் அக்கட்சியின் நிர்வாகி அமர் குமார் சர்மா ஆகியோரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொருவர் பலக்ராம் பட் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.