ஜெ. வழக்குக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் சொத்துக்களுடன் லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களை விடுவிக்கக் கோரி அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் சொத்து யாருடையது என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்வரை, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுஹான், சலமேஸ்வர், எம்.ஒய்.இக்பால் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது.
“முக்கிய நபர்கள் தொடர்புடைய வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்மை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. தற்போது நிலுவையில் உள்ள வழக்கு சிவில் பிரச்னை தொடர்பானது.
பெங்களூரில் நடந்துவரும் வழக்கு கிரிமினல் குற்றச்சாட்டின் அடிப்படையிலானது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை" என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
