நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் அரசின் திருத்தங்கள் ஆபத்தானவை: விவசாயிகள் எச்சரிக்கை

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் அரசின் திருத்தங்கள் ஆபத்தானவை: விவசாயிகள் எச்சரிக்கை
Updated on
1 min read

2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலச் சட்டத்தில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மிகவும் ஆபத்தானவை, என்று ஐந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற இணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து விவசாயிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையில் அமைந்த நாடாளுமன்ற இணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மே 29-ம் தேதி முதல் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு வரும் அந்தக் குழு, செவ்வாயன்று மூன்றாவது முறையாகச் சந்தித்தது. அப்போது 'முன்னர் இருந்த சட்டத்தில், நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய விதிகள் தற்போதைய நில கையக மசோதாவில் இடம்பெறாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது' என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.

அப்போது அவர்களை இடைமறித்த சில ஆளும்கட்சி உறுப்பினர்கள், 'முக்கியமான தேசிய திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் குறைப்பதற்காக முன்னர் இருந்த சட்டத்தில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன' என்று கூறினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், 'விவசாயிகள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்' என்று முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கருத்துகளைக் கூறும்போது பாஜக எம்பிக்கள் இடையீடு செய்ய வேண்டாம் என்று இணைக் குழு தலைவர் அலுவாலியா கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த விஷயத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து கேள்வித்தாள் ஒன்றை விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு தான் அளிக்க உள்ளதாகவும், மீண்டும் அடுத்த வாரம் திங்கள்கிழமை சந்திக்கும்போது, தங்களின் கருத்துகளை விளக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த‌ ராஷ்ட்ரிய கிசான் சங்கம், கிசான் மஸ்தூர் சங்கதன், ஹரியாணாவைச் சார்ந்த கிசான் ஜக்ரிதி மஞ்ச், பாரதிய கிசான் சங்கம் மற்றும் பிஹாரைச் சேர்ந்த‌ கேத் பச்சாவோ ஜீவன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி ஆகிய ஐந்து விவசாய சங்கங்கள் கலந்துகொண்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in