

நரேந்திர மோடியை இந்தியப் பிரதமர் என அழைப்பதைவிட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்றே அழைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் விமர்சித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியில், "நரேந்திர மோடியை பிரதமர் என அழைப்பதைவிட ஒரு நல்ல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்றே அழைக்க வேண்டும். அவரது ஓராண்டு ஆட்சியில் ஒரேஒரு நல்ல விஷயம் இருக்கிறது என்றால் அது அவரது ஆட்சி முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என்பதே. மோடியின் நல்ல நாட்கள் முடிவடைதற்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல், மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது. அதுவும் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது.
மோடி ஆட்சியில் அனைத்துப் பொருளாதார குறியீடுகளும் சரிந்து வருகின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் சென்செக்ஸ் மட்டுமே ஏற்றம் கண்டுவருகிறது" எனக் கூறியுள்ளா.
மணிசங்கர் அய்யர் எழுதியுள்ள 'அச்சி தின்? ஹா! ஹா!!' (‘Achhe Din? Ha! Ha!!’) என்ற புத்தகம் இந்த வாரம் வெளியாகிறது. இப்புத்தகத்தில், அரசு நடவடிக்கைகளை விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
அந்தப் புத்தகத்தின் முகவுரையில், "மோடி எப்போதும் தன்னைத் தானே பெருமையாக பேசிக் கொள்ளும் பழக்கம் அவருக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். அவர் இப்படியே தற்பெருமை பேசிக் கொண்டிருந்தால் மக்கள் அவர் பிரதமர் என்பதை மறந்துவிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்றே அழைப்பார்கள். வார்த்தைகளில் ஜாலம் செய்யும் மோடி அதை செயல்படுத்த தவறிவிட்டார்.
மோடியை பெரும்பான்மை பலத்துடன் மக்கள் வெற்றி பெறச்செயதனர். ஆனால், அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது மக்கள் அவரை தோற்கச் செய்வர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.