

சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் வசந்த் சதேவின் மகன் சுபாஷ் சதேவுக்கும் மருமகள் இந்துராணி சதேவுக்கும் டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
சுவிட்சர்லாந்து நாட்டின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 1195 இந்தியர்களின் பட்டியல் அண்மையில் ஒரு நாளிதழில் வெளியானது. அதில் காங்கிரஸை சேர்ந்த மறைந்த மத்திய அமைச்சர் வசந்த் சதேவின் மகன் சுபாஷ் சதே, மருமகள் இந்துராணி சதே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வரிஏய்ப்பு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தம்பதியர் இருவரும் நேற்று டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தேவேந்திர குமார் சர்மா முன்னிலையில் ஆஜராகினர்.
இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், அவர்களுக்கு ஜாமீன் வழங்கினார். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.