கர்நாடக ஆளுநரின் ஆடம்பர வாழ்க்கை அம்பலம்: சமையல், குளியல் அறைகளுக்கு ரூ.1 கோடி - ஒன்பது மாதங்களில் ரூ.6 கோடி செலவு

கர்நாடக ஆளுநரின் ஆடம்பர வாழ்க்கை அம்பலம்: சமையல், குளியல் அறைகளுக்கு ரூ.1 கோடி - ஒன்பது மாதங்களில் ரூ.6 கோடி செலவு
Updated on
2 min read

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கடந்த 9 மாதங்களில் ஆடம்பர வாழ்க்கைக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 6 கோடியை செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நண்பரான வஜுபாய் வாலா (77) குஜராத் அரசில் நிதித்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2012-ல் குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த அவர், மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த செப்டம்பரில் கர்நாடக ஆளுந ராக நியமிக்கப்பட்டார். முந்தைய ஆளுநருக்கு பதவிகாலம் மீதம் இருந்த நிலையில் அவரை நியமித்த‌தற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கர்நாடக ஆளுநராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இந்தியில் உரையாற்றியது, பள்ளிகளில் யோகாவை பாடமாக அனுமதிக்க வேண்டும் என பேசியது, அரசு விழாவில் தேசிய கீதம் இசைத்துக் கொண்டிருந்தபோது எழுந்து சென்றது உள்ளிட்ட விவகாரங்களில் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

இந்நிலையில் ஆளுநர் வஜுபாய் வாலா இதுவரை அரசுப் பணத்தை எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ஆளுநர் அலுவலகம் அளித்துள்ள பதில் வருமாறு:

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து மே 31-ம் தேதி வரை கடந்த 9 மாதங் களில் கட்டிடங்களைப் புதுப்பித் தற்காக ரூ. 3 கோடி செலவு செய் துள்ளார். அதில் சமையல் அறையை கண்ணாடி மற்றும் உயர் ரக மரத்தில் அமைத்ததற்கு ரூ. 60 லட்சமும் குளியல் அறையை உயர் ரக சலவை கற்களில் புதுப்பித்ததற்கு ரூ. 40 லட்சமும் செலவிட்டுள்ளார்.

17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஜ்பவனில் பாதைகள் அமைக்க ரூ. 50 லட்சமும் 61 பாதுகாப்பு ஊழியர்களின் கட்டிடங்களை புதுப்பித்ததற்கு ரூ.40 லட்சமும் கணிணி வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 30 லட்சமும் தொலைபேசியை சரி செய்ததற்கு ரூ. 25 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவ செலவுக்கு ரூ. 50 லட்சமும் உணவு செலவுக்கு ரூ. 35 லட்சமும் செலவு செய்யப் பட்டுள்ளது.

விமான கட்டணம் ரூ.1.5 கோடி

இதேபோல ஆளுநர் வஜுபாய் வாலா வெளியூருக்கு விமானங்களில் பயணித்ததற்கும் சுற்றுலாவுக்கு தனி ஹெலிகாப்டரில் சென்றதற்கும் ரூ. 1.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் அரசு பணிகள் மற்றும் தனிப்பட்ட பணிகளுக்காக வஜுபாய் வாலா ரூ. 6 கோடி வரை செலவு செய்துள்ளார். இதற்கான பணத்தை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ராஜ் பவனில் தனது மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் 6 பேரக் குழந்தைகளுடன் ஆளுநர் வசிக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு பணிவிடை செய்ய 300 ஊழியர்கள் உள்ளனர். ராஜ்பவனில் சிறிய அளவிலான ரோஜா பூந்தோட்டமும் விளையாட்டு மைதானமும் நூலகமும் உள்ளது.அதனை பராமரிப்பதற்கும் ஊழியர்களுக்கும் மாதந்தோறும் பல லட்ச ரூபாய் செலவாகிறது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தந்தை போன்றவர்

இது தொடர்பாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா விடம் கேட்டபோது, ''ஒரு மாநிலத் துக்கு ஆளுநர் என்பவர் தந்தை போன்றவர். அரசியலமைப்பு சட்டம் அவருக்கு வழங்கியிருக்கும் பொறுப்பு மிகவும் உயர்ந்தது. அவரைப் பற்றி கேள்விக் கேட்க முடியாது. எனவே அரசுக்கு வரிப்பணம் செலுத்தும் பொதுமக்கள், தங்களது பணத்தை யார் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். நேரடியாக இந்த விவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை''என்றார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, ''இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது''என்றார்.

ஆளுநரின் ஆடம்பர வாழ்க்கைக்கு கர்நாடக அரசியல் கட்சியினரும் கன்னட அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் வரிப்பணத்தை தண்ணீராக செலவழிக்கும் அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிடில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தலித் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in