

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஹெச்.வகேலா ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டுள்ளதால், தற்காலிக தலைமை நீதிபதியாக சுப்ரோ கமல் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி டி.ஹெச்.வகேலா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில் அரசுக்கு எதிராகவும், முக்கிய பிரமுகர் களுக்கு எதிராகவும் கடுமையான தீர்ப்புகளை வழங்கியதால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டார். தமிழக முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை நியமித்து, அவருக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
மேலும் அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் செயல்பாடு ஒரு தலை பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரை நீக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் வகேலாவை வேறு மாநிலத்துக்கு மாற்ற கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு வகேலா ஆட்சேபம் தெரி வித்ததால் பணியிட மாற்றம் தள்ளிப் போனதாக கடந்த டிசம்பரில் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி டி.ஹெச்.வகேலா ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
முகர்ஜி நியமனம்
இந்நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுப்ரோ கமல் முகர்ஜி கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பதவியேற்ற ஒரு மாதத்தில் கோடை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதியாக இருந்து 31 வழக்குகளை விசாரித்துள்ளார். இந்நிலையில் சுப்ரோ கமல் முகர்ஜியை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவிட்டார்.