

தலைநகர் டெல்லியில், போதைப்பொருள் வியாபாரியான 59 வயதுப் பெண்ணைக் கைது செய்திருக்கின்றது டெல்லி அனைத்து மகளிர் காவல்துறை அணி. முழுக்க முழுக்கப் பெண்களாலேயே செயல்படுத்தப்பட்ட முதல் ஆபரேஷன் இது என்கிறது காவல்துறை.
"போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட கம்லேஷ் என்கிற ‘பேபி’யை அனைத்து மகளிர் காவல் அணி கைது செய்திருக்கிறது" என்று டெல்லியின் தென்மேற்குப் பகுதியின் காவல்துறை இணை ஆணையாளரான சஞ்சீவ் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
குற்றவியல் வழக்குகளில் சட்டங்களின் நெளிவு சுளிவுகளில் இருந்து பேபி மற்றும் குடும்பத்தார் வெளியேற நினைப்பார்கள்; பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகக் கூறி, அவர்கள் தப்பித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
கள அலுவலர்கள் கொடுத்த தகவல்களின் மூலமும், துணைப்பிரிவு நிலையின் முறையான திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமும் தொடங்கப்பட்ட அதிரடி சோதனைஅனைத்து மகளிர் காவல் அணியால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
1999-ல் இருந்து போதை மருந்து வியாபாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்தவர் பேபி. அவர் போதை மருந்து விற்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து காவல்துறையால் ரகசியக் கண்காணிப்பு நடத்தப்பட்டது. தகவல் வெளியே கசிந்த உடனே, அதிக அளவிலான போதை மருந்துகளை வேறோர் இடத்தில் பதுக்கி வைக்கத் திட்டமிட்டார் பேபி. இதனையடுத்து, 25 பேர்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல்துறைக் குழு, போதை மருந்து வேட்டையில் இறங்கியது.
மூன்று அடுக்குப் பாதுகாப்புகளோடு இரும்புக் கதவுகளைக் கொண்டிருந்தது பேபியின் வீடு, ஆனாலும் தயங்காமல் ஆபரேஷனில் இறங்கி, பேபி, அவரின் மகன் மந்தீப், மகள் பூஜா ஆகியோரைக் கைது செய்தது மகளிர் காவல்துறை. ரெய்டின் போது பேபியின் வீட்டிலிருந்து 266 கிராம் போதைப்பொருள், 2 கிலோ கஞ்சா, 64,000 ரூபாய் பணம் மற்றும் சிறிய அளவிலான போதையூட்டும் சரக்குகளையும் கைப்பற்றியது.
இந்த ஆபரேஷனின் வெற்றி, போதை மருந்தை உட்கொண்டு கொலை, கொள்ளையைச் செய்ய முயற்சிப்போரிடம் இருந்தும், போதை மருந்தால் சீரழியும் இளைய சமுதாயத்தையும் காப்பாற்றியிருக்கிறது" என்றார்.