

பிஹார் மாநிலம் சித்தமர்ஹி ஆட்சியர் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதையொட்டி நிகழ்ந்த கலவரம், துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மற்றும் 2 முன்னாள் எம்.பி.க்கள் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார் மாநிலம் சித்தமர்ஹி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அரசியல் வாதிகள் மிகப்பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு அலுவலர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தடியடி நடத்தினர். இருப்பினும் நிலைமை மோசமடையவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ராமநாதன் பிரசாத், காவல்துறை கண்காணிப்பாளர் பரேஷ் சக்ஸேனா ஆகியோர் 60 பேர் மீது தும்ரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், 45 பேர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டனர்.
பாஜக எம்எல்ஏ நரேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. நாவல் கிஷோர் ராய், ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. அன்வருல் ஹக், ராஷ்ட்ரீய லோக் சமட்டா கட்சி மாவட்ட தலைவர் ராம் லஷண் சிங் குஷ்வாஹா, பொதுச்செயலாளர் மோகன் குமார் சிங் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது இஸ்ரத் ஆலம் தீர்ப்பளித்தார்.
கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.