

வாரணாசி பாஜக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளும், உத்தரப்பிரதேச மாநில போலீசாரும் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
16-வது மக்களவை இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில் பாஜக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனையின் போது பிரச்சாரத்திற்காக வைத்திருந்த சில பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட பின்னரும் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட துண்டு பிரசுரங்கள், டி-ஷர்ட்டுகள், தொப்பிகள் ஆகியன விநியோகிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பாஜக இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, இது மாதிரியான நடவடிக்கைகள் பாஜக-வை தனிப்பட்ட முறையில் குறிவைத்தே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.