

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாரும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப் பது என சபதம் ஏற்றனர்.
தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், அதை மறந்து கூட்டணி அறிவிப்பு வெளியிட்ட பிறகு முதல் முறையாக இருவரும் ஒரே மேடையில் நேற்று தோன்றினர்.
இதற்கு முன்பு இரண்டு நிகழ்ச்சிகளில் இந்த இரு தலைவர்களும் கூட்டாக பங்கேற் பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதி லும் அது நிகழவில்லை. கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் லாலு வெளிப்படையாக இல்லாமல் தடை ஏற்படுத்துவதாகக் கூறி லாலு பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு வராமல் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.
இந்நிலையில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதென ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
‘இந்துஸ்தான் சமகம்’ என்ற பெயரில் பிஹார் மாநிலத்துக்கான திட்டம் வகுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இதில் லாலுவும் நிதிஷ் குமாரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பேசியதாவது:
நாட்டிலேயே ஜாதி அரசியலை வெளிப்படையாக செயல்படுத் துவது பாஜகதான். ஆனால் அதை வசதியாக மறந்துவிட்டு எங்களை ஜாதியவாதிகள் என்று பாஜக பொய் பிரசாரம் செய்கிறது. வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக ஜாதி அடிப்படையில் பாஜக மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறது.
பிஹாரில் 2005-ல் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அப்போதிலி ருந்தே மாநிலத்தில் நடைபெறும் நல்லாட்சியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பாஜக கூறி வருகிறது.
கூட்டணியிலிருந்து வெளி யேறிய நிலையில், அமைச்சரவை யில் பாஜகவினர் இல்லாதபோதி லும் எல்லா அமைச்சகங்களிலும் சிறப்பாக பணி நடப்பதற்கு தங்களுக்கும் பங்கு இருப்பதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது.
வாக்குகளைப் பெறுவதற்காக மதவெறியை மக்கள் மத்தியில் பாஜக தூண்டி விடுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லாலு பிரசாத் யாதவ் கூறிய தாவது:
1974-ல் ஜெயப்பிரகாஷ் நாராயணின் முழுப் புரட்சி இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே நிதிஷு டன் எனக்கு நெருக்கம் உள்ளது. பிஹார் அரசியலில் எனக்கு பெரிய பையன் என்றும் நிதிஷுக்கு சின்ன பையன் என்றும் செல்லப் பெயர் உள்ளது.
அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், 1990-ல் முதல்வராகவும் நான் பொறுப்பேற்றதில் நிதிஷுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இடையில் பாஜகவின் மாய வலையில் வீழ்ந்த நிதிஷை, மீட்டு வெளியே கொண்டுவந்தது நான்தான் என்றார் லாலு.
பிஹாரில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரை ஏற்க முதலில் தயங்கினார் லாலு. ஆனால், நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்தான் ஆதரிப்போம் என்று காங்கிரஸ் தெளிவுபடுத்திய பிறகு வேறு வழியின்றி லாலு அதை ஏற்றுக்கொண்டார்.