

தெலங்கானா மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே பர்மிட், போக்குவரத்து வரியை குறைப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் குதித்தனர். இதனால் மாநிலம் முழுவதிலும் சுமார் 3.5 லட்சம் லாரிகள் முடங்கியதால்அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாநில அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், மொஹீந்தர் ரெட்டி ஆகியோர் தலைமையில் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு மாநிலங்களுக்கும் ஒரே பர்மிட் வழங்குவது தொடர்பாக விரைவில் கமிட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதுபோல மற்ற கோரிக்கைகளும் ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.