

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி முழு உதவி செய்யும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜூன் 2-ல் தெலுங்கானா புதிய மாநிலத்தின் தலைமை பொறுப்பேற்கிறது தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி. இக்கட்சி, தொடர்ந்து மத்திய அரசுடன் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், டி.ஆர்.எஸ். கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெங்கய்யா பேசியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது, "அரசியல் செய்வதற்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது, புதிய மாநிலம் வளர்ச்சி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது எவ்வளவு அவசியமோ அதே அளவு தெலுங்கானா - ஆந்திர மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் அவசியமே.
இரு மாநில முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். மத்திய அரசு பாரபட்சமின்றி உதவு செய்ய தயாராக இருக்கிறது. மக்கள் மனங்களில் விரோத மனப்பான்மையை விதைப்பதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெலுங்கானா மாநிலம் அமைவது பாஜகவால் மட்டுமே சாத்தியப்பட்டது" என்றார்.