

கிரீன்பீஸ் பன்னாட்டு சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சேர்ந்த விழிப்புணர்வு பிரச்சாரகர் ஒருவர் இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஏரோன் கிரே பிளாக் என்ற கீரீன்பீஸ் இயகக்த்தைச் சேர்ந்த பிரமுகருக்கு பெங்களூரு விமான நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “கிரே-பிளாக் பெங்களூரு விமான நிலையத்துக்கு ஜூன் மாதம் 6-ம் தேதி 23.40 மணியளவில் வந்தார். அவரது பெயர் 'தடை செய்யப்பட வேண்டியோர் பட்டியலில்' இருந்தது. அதனால் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அயல்நாட்டு நிதிச்செலவாணி விதிமுறைகளை கிரீன்பீஸ் இயக்கம் மீறியதாக மத்திய அரசு அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது, ஆனால் அதன் பிறகு இரண்டு கணக்குகளை நடத்தலாம் என்று கோர்ட் அனுமதி அளித்தது.
இந்நிலையில் கிரே-பிளாக் சிட்னியிலிருந்து விமானத்தில் இந்தியா வந்தார், இந்தியாவில் உள்ள கிரீன்பீஸ் ஊழியர்கள் பலருடன் சில சந்திப்புகளுக்கு ஏற்பாடு ஆகியிருந்தது.
கிரே-பிளாக் மத்திய பிரதேச மஹன் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பரப்புரை மேற்கொண்டவர் என்றும், இந்திய அரசை கடுமையாக விமர்சித்து அவர் தனது வலைப்பக்கங்களில் பல கட்டுரைகளையும் எழுதியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் பிறந்த முன்னாள் பத்திரிகையாளரான ஏரோன் கிரே-பிளாக் நெதர்லாந்தில் வசித்து வருகிறார். கிரீன்பீஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக பிணைந்துள்ளவர் இவர்.
முறையான வர்த்தக விசா வைத்திருந்தும் தனக்கு இந்தியா அனுமதி மறுத்துள்ளது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, “நாங்கள் அனுமதி மறுக்கவில்லை, இதனை நாங்கள் செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்பு கருதி மற்றொரு அமைச்சகம் செய்துள்ளது. இது வேறு விஷயம்” என்றார்.
விமானநிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் தனக்கு எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்ற கிரே பிளாக், அவர்கள் தனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து பிறகு கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் தன்னை ஏற்றி விட்டதாக தெரிவித்தார். இவர் கோலாலம்பூர் சென்றவுடன் பாஸ்போர்ட் திரும்பி ஒப்படைக்கப்பட்டது என்றார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரியில் கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் செயல்பாட்டாளர் பிரியாபிள்ளை லண்டன் செல்லும் விமானத்திலிருந்து புதுடெல்லி அதிகாரிகளால் இறக்கி விடப்பட்டார்.
இதனையடுத்து தற்போது கிரே-பிளாக் என்ற செயல்பாட்டாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.