

மேற்குவங்க மாநிலத்தில், கடன் வழங்கக் கோரி வங்கி மேலாளர், ஊழியர்களை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வங்கிக்குள் வைத்து பூட்டினர். மேற்குவங்க மாநிலம், ஹவுரா அருகே தாஸ்நகர் உள்ளது. இங்குள்ள அரசு வங்கியை சுமார் 200-க்கும் மேற்பட்ட திரிணமூல் தொண்டர்கள் நேற்றுமுன்தினம் முற்றுகையிட்டனர்.
வேலையில்லாத இளைஞர் களுக்காக மானியத்துடன் தொழில் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு செயல் படுத்தி வருகிறது. ஆனால் தாஸ் நகர் அரசு வங்கி, இளைஞர்களுக்கு மானியக் கடனை வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அரசு வங்கியை திரிணமூல் காங்கிரஸார் முற்றுகையிட்டு மேலாளரிடம் கேள்வி எழுப்பினர். அவர்களின் குற்றச்சாட்டை மறுத்த வங்கி மேலாளர், தகுதியுள்ள விண்ணப் பதாரர்களுக்கு மட்டுமே மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திரிணமூல் காங்கிரஸார், மேலாளர் மற்றும் ஊழியர்களை வங்கிக்குள் அடைத்து ஷட்டரை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வங்கி மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். போலீஸாரும் வருவாய் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து மேலாளர், ஊழியர்களை மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி வங்கி மேலாளரை மாநில அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.