

நயன்மோனி பெஸ்பரூவா, வயது 37. இப்போது இந்தப் பெயர் அசாம் மாநிலத்தில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. நான்கு குழந்தைகளுக்கு தாயான பிறகும் படிக்கும் ஆர்வத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுதான் அதற்கு காரணம்.
வளர்ச்சியில் பின்தங்கிய அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள டிகோவ்கினார் சாங்மைகோன் கிராமத்தை சேர்ந்தவர் நயன்மோனி பெஸ்பரூவா. இவர் 18 வயதில் படித்துக் கொண்டிருக்கும்போதே பெற்றோர் திருமணம் செய்து விட்டனர். அதன்பிறகு 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவருடைய கணவர் அங்காடியில் காய்கறி விற்பனை செய்கிறார். குடும்ப பாரத்தை சுமந்தாலும் பாதியில் விட்ட படிப்பு நயன்மோனியை உறுத்திக் கொண்டே இருந்தது.
மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையை கணவனிடம் வெளிப்படுத்தினார் நயன்மோனி. அவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு அளித்தார். அது போதும், குடும்பத்தையும் பார்த்து கொண்டு பள்ளிக்கும் சென்று படிப்பேன் என்று உறுதி கொண்டார். அதன்பிறகு `கோவாங் பிதுபோர் பெண்கள் மேல்நிலை பள்ளி’யில் கடந்த 2013-ம் ஆண்டு சேர்ந்தார். இவருடைய மூத்த மகன் அன்குர். இவனும் பிளஸ் 2 படித்தான்.
இருவரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதிசயத்தக்க வகையில் நயன்மோனி 69.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இவருடைய மகன் அன்குர் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்று மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். சமூகவியல் பாடத்தில் 80 சதவீத மதிப்பெண் எடுத்துள்ள நயன்மோனி, அவருக்குப் பிடித்தமான அசாம் இலக்கியத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பெரும் வருத்தத்தில் உள்ளார்.
இதுகுறித்து நயன்மோனி கூறுகையில், “நான் பட்ட கஷ்டங் களுக்கு பலன் கிடைத்துள்ளது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், மூத்த மகனும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். கணவருடன் காய்கறி விற்க அவனும் அங்காடி சென்று வருவான். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். அவன் நன்றாக படித்து வேலைக்கு போனால்தான் எங்கள் வறுமை நீங்கும்’’ என்றார்.
பள்ளி முதல்வர் சன்டோரா கோகய் கூறுகையில், “பிளஸ் 2 முதல் ஆண்டு தேர்வில் நயன்மோனி 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததே அவர்தான். ஆனால், பணம் இல்லாததால் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், 2-ம் ஆண்டு பள்ளி கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்று நாங்கள் கூறிவிட்டோம். அத்துடன், புத்தகங்கள், பயிற்சி போன்றவற்றை இலவசமாகக் கொடுத்தோம். பள்ளியில் தேர்ச்சி பெற்றதன் மூலம் எங்களை நயன்மோனி பெருமைப்படுத்தி விட்டார். அத்துடன் படிப்பை பாதியில் விட்டுவிட்ட மற்ற பெண்களுக்கும் அவர் தூண்டுகோலாக இருக்கிறார்’’ என்றார்.
நயன்மோனி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றது சாதாரண விஷயமல்ல. ஏனெனில், இவர் வசிக்கும் இடத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பள்ளி உள்ளது. தினமும் சைக்கிளில்தான் பள்ளிக்கு சென்று வருவார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கணவனை அங்காடிக்கு அனுப்பி விட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தானும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவார். மழைக் காலங்களில் இவருடைய டிகோவ்கினார் சாங்மைகோன் கிராமத்துக்குள் சென்று வர முடியாது. அந்தளவுக்கு மோசமான பாதைகள்.
மாலை வீடு திரும்பியதும் மீண்டும் வேலை. எல்லோரும் இரவு சாப்பிட்டு உறங்கச் சென்ற பிறகுதான், புத்தகங்களை எடுத்து படித்துள்ளார் நயன்மோடி. கடின உழைப்பின் மூலம் பிளஸ் - டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற நயன்மோனி, அசாம் மொழியில் கவிதைகள் இயற்றும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.