

சன் நெட்வொர்க் சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இது குறித்து கேட்டுக் கொண்டாலும், சன் நெட்வொர்க் உரிமையாளர்கள் பல விதிமீறல்கள் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாக பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து என்ன கருத்து எழுந்தாலும் சன் டிவி குழும சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை, என்று மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக அதே செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் கொடுத்த அனுபவத்தையடுத்து, தனியார் தொலைக்காட்சி சானல்களுக்கு உரிமம் வழங்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதாவது உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போது, கிரிமினல், நிதிமுறைகேடுகள், பயங்கரவாத தொடர்பு, மற்றும் பெரிய நிதிமோசடி, ஆகியவை தொடர்பான வழக்குகள் எதுவும் அவர்கள் பெயரில் நிலுவையில் இல்லை என்று சுய-சான்றிதழ் தீர்மான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறைச் செயலர் எல்.சி.கோயல் இது தொடர்பாக தனியார் சானல் உரிமங்களுக்கு 14 அளவுகோல்களை நிர்ணயித்துள்ளார்.