

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தனியார் பஸ்ஸில் வந்த நகைக்கடை ஊழியர்களிடமிருந்து 6 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை ஊழியர்களான செந்தில், மகேந்திரன் ஆகிய இருவரும் 4 நாட்களுக்கு முன்னர் 14 கிலோ தங்க நகைகளை ஹைதராபாதில் உள்ள தங்களது கிளை நிறுவன கடையில் கொடுக்கச் சென்றனர். பின்னர் அங்கிருந்து 6 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு, நேற்று முன் தினம் இரவு தனியார் பேருந்தில் ஏறி சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அந்த பஸ் நேற்று காலை நெல்லூர் மாவட்டம், நாயுடு பேட்டை பேருந்து நிலையத்தில் காலை சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டது. செந்திலும், மகேந்திரனும் இறங்கி சிற்றுண்டி அருந்தினர். பின்னர் மீண்டும் பஸ்ஸில் ஏறியபோது தாங்கள் கொண்டுவந்த பைகளில் 6 கிலோ தங்க நகைகள் அடங்கிய ஒரு பையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பஸ் கண்டக்டரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாயுடு பேட்டைகாவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நாயுடு பேட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பயணி அவசர அவசரமாக ஒரு பையை எடுத்து கொண்டு கீழே இறங்கி காரில் சென்று விட்டதாக அங்கிருந்த சக பயணிகள் தெரிவித்தனர். இந்த பஸ்ஸில் ஏறிய பயணிகள் குறித்த விவரங்களை சேகரித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.