

உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மீது தலித் சிறுமியின் நிழல் விழுந்ததால், அச்சிறுமியை உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அடித்து உதைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கணேசபுரா கிராமத்தில் ஜூலை 13-ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக அன்றைய தினமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் நீரஞ் பாண்டே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அச்சிறுமியின் தந்தை கூறியது: சம்பவம் நடந்த அன்று எனது மகள், தண்ணீர் எடுக்க குழாயடிக்கு சென்றுள்ளார். அப்போது பூரண் யாதவ் என்பவர் அந்த வழியாக சென்றுள்ளார். அவர் மீது என் மகளின் நிழல் விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், எனது மகளை சூழ்ந்து அடித்து உதைத்துள்ளனர்.
மீண்டும் இந்த குழாயடிக்கு தண்ணீர் எடுக்க வந்தால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக புகார் அளிக்க நான் காவல் நிலையத்துக்கு சென்றபோது என்னை தடுத்து நிறுத்தி மிரட்டினர். எனினும் அவர் களுக்கு அஞ்சாமல் நான் புகார் அளித்தேன் என்றார். போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.