Published : 14 Jun 2015 11:47 AM
Last Updated : 14 Jun 2015 11:47 AM

மாவு மில்லில் கோதுமை அரைத்த கட்டணத்தில் 4 ரூபாய் குறைந்ததால் கடும் மோதல்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணம்

கோதுமை அரைத்த கட்டணத்தில் 4 ரூபாய் குறைந்ததால், இரு தரப்புக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கூர்பூர் பகுதியில் உள்ளது மொஹிதின்பூர் கிராமம். இங்கு வஷிஸ்தா நாராயண் துபே என்பவருக்கு சொந்தமான மாவு மில் உள்ளது. இங்கு கோதுமை அரைக்க 15 வயது தலித் சிறுவன் ரஜத் என்பவன் நேற்றுமுன்தினம் சென்றுள்ளான். கோதுமை அரைத்ததற்கு கட்டணத்தில் ரூ.4 குறைவதாக ரஜத் கூறியுள்ளான். இதில் ஆத்திரம் அடைந்த துபேவின் மகன்கள் சுரேஷ், ராஜேஷ் ஆகியோர் ரஜத்தை அடித்து உதைத்துள்ளனர். கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். அருகில் இருந்தவர்கள் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து ரஜத்தின் உறவினர்கள், நண்பர்கள் மாவு மில்லை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து கும்பலை நோக்கி ராஜேஷ் சுட்டார். இதில் 18 வயதுள்ள ராகுல், அஷு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்தனர். மேலும், விவேக், விகாஸ் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கலவரம் மேலும் பெரிதானது. ஆத்திரம் அடைந்த கும்பல் துபேவின் மாட்டுக் கொட்டகை, மோட்டார் சைக்கிள், வீடு ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தினர்.

தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை அறிந்து கூடுதல் படைகளை வரவழைத்தனர். இதுகுறித்து அலகாபாத் மண்டல போலீஸ் ஐஜி பிரிஜ் பூஷண் சர்மா கூறுகையில், ‘‘துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை ராஜேஷ், சுரேஷ், ராகேஷ், சன்னி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். விசாரணையில் ராஜேஷிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருப்பது தெரியவந்தது. ராஜேஷ், சுரேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x