

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையின்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ராட்வானி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் உள்ளூர் போலீஸாரும் நேற்றுமுன்தினம் இரவு சம்பவ பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு கையெறி குண்டுகளை வீசினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இருதரப்புக்கும் இடையே சில மணி நேரம் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் ஹில்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
சண்டையின்போது அப் பகுதியைச் சேர்ந்த ஆசிப் அகமது என்ற இளைஞர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.