

லலித் மோடி விவகாரத்தில் சிக்கியுள்ள சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜேவுக்கு எதிராஜ பாஜக-விலிருந்தே எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவுவது சட்ட ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் தவறு என்று பாஜக எம்.பி. ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தப்பி ஓடியவர்களுக்கு யார் உதவி செய்தாலும் அவது தவறு. இது சட்ட ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் தவறாகும். தப்பி ஓடியவர்களை யார் சந்தித்து பேசினாலும் அது முற்றிலும் தவறு. இவர்களுக்கு யார் உதவி செய்தாலும் அது முற்றிலும் தவறான செயல் என்பதே எனது கருத்து” என்றார்.
சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரின் பெயரை ஆர்.கே.சிங் குறிப்பிடவில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் எனது கருத்தை தெரிவித்தேன். நான் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை” என்றார்.
ஆர்.கே. சிங் மேலும் கூறும்போது, “லலித் மோடியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். தேவைப்பட்டால் அவரது சொத்துகளை முடக்க வேண்டும். லலித் மோடியை சட்டத்தின் முன்னிறுத்தும் வகையில் அவரை இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ஐ.பி.எல். நிதி முறைகேடு மற்றும் சூதாட்டப் புகாரில் சிக்கிய லலித் மோடி, கடந்த 2010-ம் ஆண்டு லண்டன் சென்றார். பிறகு நாடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லலித் மோடி பிரிட்டனில் பயண ஆவணங்கள் பெறுவதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில் சுஷ்மா, வசுந்தரா ஆகியோருக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ள நிலையில், மாறுபட்ட கருத்தை ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் உள்துறை செயலாளர் ஆவார்.