

மாணவர் அமைப்பை தடை செய்தது தொடர்பாக சென்னை ஐஐடி விளக்கம் அளிக்கக் கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம் என்ற பெயரில் ஒரு குழு செயல்பட்டது. அந்த குழுவின் உறுப்பினர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடியை விமர்சித்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பை சென்னை ஐஐடி நிர்வாகம் அண்மையில் தடை செய்தது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக் கும்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை ஐஐடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.எல்.புனியா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்களுக்கு பேச்சு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மாணவர் அமைப்புகளுக்கு தடை விதிக்கப் படுவது அவர்களின் உரிமையை நசுக்குவது போலாகும். இது தவறான நடவடிக்கை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்ற பிறகு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன.
அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் நாகாரில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். நான் அந்த இடத்துக்குச் சென்றபோது என்னுடன் ஆட்சியர் வரவில்லை. துணை ஆட்சியர் மட்டுமே வந்தார்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக கொடுமைகள் நடந்தால் அனைத்து அமைப்புகளும் ஒன்று பட்டு போராட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் இப்பிரச்சினை களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.