செயற்கைக்கோள் ஏவும் செலவைக் குறைக்க மறுமுறை ஏவத்தக்க ராக்கெட் அறிமுகம்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் தகவல்

செயற்கைக்கோள் ஏவும் செலவைக் குறைக்க மறுமுறை ஏவத்தக்க ராக்கெட் அறிமுகம்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் தகவல்
Updated on
1 min read

செயற்கைக்கோள் ஏவப்படும் செலவைக் குறைக்க, மீண்டும் மீண்டும் ஏவும் வகையிலான ராக்கெட்டை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

மேலும் வானியல் துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ‘அஸ்ட்ரோசாட்’ வரும் செப்டம்பர் மாதம் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான அரசின் விண்வெளித்துறையில் ஓராண்டு சாதனை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் இதுதொடர்பாகக் கூறியதாவது:

செயற்கைக்கோளை ஏவிய பின், அந்த ராக்கெட்டை மீண்டும் ஏவுவதற்குப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்கட்ட அளவில் உள்ளது. இன்னும் ஏராளமான பரிசோதனை முயற்சிகள் நிறைவுபெறவேண்டியுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் கட்டமாக மீண்டும் ஏவத்தக்க ராக்கெட் ஏவப்படும். மீண்டும் ஏவத்தக்க ராக்கெட்டை பயன்படுத்துவதன் மூலம் செயற்கைக்கோளை ஏவுவதற்கான செலவு பத்தில் ஒரு பங்காகக் குறையும்.

இந்த ராக்கெட் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய பின் கடலில் தரையிறக்கப்படும். இதன் உச்சகட்டமாக ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஓடு தளத்தில் தரையிறக்க முயற்சி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக விவகாரங்கள் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

இந்திய பிராந்திய போக்குவரத்து செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆர்என்எஸ்எஸ்) தொடர் செயற்கைக்கோள்களின் ஒரு பகுதியாக இரு செயற்கைக்கோள்கள் அடுத்த ஆண்டு ஏவப்படும். எஞ்சிய 3 செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏவப்படும். கடந்த ஓராண்டில் இந்தியா 11 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் முழு அளவில் தயாராகி யுள்ளது. வரும் செப்டம்பரில் ஏவப்படும். மங்கள்யானிலிருந்து புகைப்படங்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் இன்னும் 3 ஆண்டுகள் பிடிக்கும்.

நாம் நாசாவுடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பிரான்ஸின் விண்வெளி மையத்துடனும் ஆலோசித்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகம் நமது செவ்வாய்-2020 திட்டத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகிறது. நமது நிபுணர்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in