

பாலியல் வக்கிர குறுந்தகவல்களை பதிந்த ட்விட்டர் ஃபேக் ஐடியாளர் ஒருவர் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
@LutyensInsider இந்த ஐடி-யில் இருந்து ஸ்வாதி சதுர்வேதி என்ற பெண் பத்திரிகையாளருக்கு தொடர்ந்து வக்கிர குறுந்தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அனுப்பப்பட்ட ஆபாச தகவல்களால் எரிச்சலடைந்த ஸ்வாதி, டெல்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து @LutyensInsider என்ற ட்விட்டர் ஹேண்டில் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ஸ்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்த சில நிமிடங்களில் சர்ச்சை ட்விட்டர் ஹேண்டிலை இயக்கிய நபர் அதன் பெயரை மாற்றியமைத்துள்ளார்.
@gregoryzackim என்ற புதிய ஹேண்டிலை ஃபேக் ஐடியாளர் தொடங்கினார். ஆனால், அவரை அடையாளம் கண்டு கொள்ள துருப்புச் சீட்டாக இருந்தது ட்விட்டர் ஹேண்டிலில் இருந்த ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 40.8 ஆயிரம் என்பது மட்டுமே.
போலீஸ் புகாரில் ஸ்வாதி, "சட்டப் பிரிவு 66(A) புத்தாக்கம் பெற்ற பிறகு @LutyensInsider ட்விட்டர் ஹாண்டிலில் தன்னையும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் இணைத்து தவறாக விமர்சித்த ஆபாச குறுந்தகவல்கள் அதிகரித்தன" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு ஸ்வாதி தனது ட்விட்டரில், "ஃபேக் ஐடியாளரை போலீஸார் நெருங்கிவிட்டனர்" எனத் தகவல் பதிந்திருந்தார்.
இந்த புகார் குறித்து போலீஸார், "சம்பந்தப்பட்ட ட்விட்டர் ஹேண்டிலை இயக்கும் நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 (d)-ன் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ட்விட்டரில் தான் ஆபாசமாக விமர்சிக்கப்பட்டதால் ட்விட்டர் இணையப் பக்கத்தில் இயங்குவதை தான் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை என ஸ்வாதி தெரிவித்துள்ளார். அதேவேளையில் தனது தன்மானம் பாதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அதன் காரணமாகவே போலீஸில் புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆன்லைனில் பெண்கள் முறையற்ற விமர்சனங்களுக்குள்ளாவது இணையம் தொடங்கப்பட்ட காலத்துக்கு நிகராக பழமையானதாக இருந்தாலும் அண்மைக்காலமாக இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பது அதிகரித்துள்ளது.
சர்மிஷ்தா முகர்ஜி | கோப்புப் படம்
சமீபத்தில் ட்விட்டரில் கலாய்ப்புக்கு ஆளான டெல்லி காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சர்மிஷ்தா முகர்ஜி, (குறிப்பு: இவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஆவார்) "நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், நம் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அதற்காக தவறான கருத்துகளை பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை"
என்னப் பற்றி அவதூறான பதிவுகள் வரும்போது நான் அவற்றை மேற்கோள்காட்டி பதிவிடுவேன். அவ்வாறு நான் செய்வதால் சிலர் என்னிடம் வருந்தி மன்னிப்பு கோரியுள்ளனர், சிலர் தங்கள் வக்கிர தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கின்றனர்" என்றார்.