

டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் பொறுப்பு வகிக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருக் கும் இடையில், அதிகாரிகள் நியமன விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றங்களை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறினார். ஆனால், டெல்லியில் உயரதிகாரிகள் நியமனம், பணி யிட மாற்றங்கள் செய்ய ஆளுந ருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
இந்நிலையில்,டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக எம்.கே.மீனாவை, ஜூன் 8-ம் தேதி நியமித்தார். இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையை எதிர்த்தும், மீனாவின் நியமனத்தை ரத்து செய்ய கோரியும், ஆம் ஆத்மி அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக மீனா நீடிப்பார் என்று நேற்று தீர்ப்பளித்தது. மேலும், 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.