

இந்தியாவின் பண்டைய கருத்துகளையும், மதிப்புகளையும் அயல்நாட்டவர்கள் பாராட்டுகின்றனர், ஆனால் நம் நாட்டில் அது காவிமயமாக்குதல் என்று விமர்சிக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்து கல்வி வாரியம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் புதுடெல்லியில் ஸ்மிருதி இரானி பேசினார்.
பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கணிதவியல் பேராசிரியர் மஞ்சுல் பார்கவா, சமஸ்கிருத கவிதைகளிருந்து கணிதவியல் கருத்தாக்கங்களை தான் கற்றதாகத் தெரிவித்ததையடுத்து அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன. அதாவது கணிதக்கல்வியை காவிமயப்படுத்துவதாக மஞ்சுல் பார்கவா மீது குற்றம் சுமத்தப்பட்டன.
இது பற்றி ஸ்மிருதி இரானி பேசும்போது, “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணிதத்தை காவிமயப்படுத்துகிறார் என்று அவர் மீது சிலர் விமர்சனம் வைத்தனர். இது போன்ற விமர்சனங்கள் இந்தியாவில்தான் சாத்தியம். பண்டைய கணித முறை அயல்நாடுகளில் பாராட்டப்படுகிறது, ஆனால் இங்கோ அது காவிமயமாகிவிடுகிறது.
இந்தியா என்பதாலேயே மதிக்கக்கூடாது என்பதா? நமது பாரம்பரியம், நமது பலம், நமது பண்பாடு, நமது வரலாறு ஆகியவற்றிலிருந்து நாம் வெட்கி ஒதுங்குவது என்பது வேறு நாடுகளில் சாத்தியமா?” என்றார்.
சர்வதேச யோகாதின கொண்டாடப்படுவது குறித்து ஸ்மிருதி இரானி கூறும்போது, “ஐ.நா.வில் சர்வதேச யோகா தினத்துக்கு ஆதரவு அளித்துள்ள 175 நாடுகளும் நம்மைப்போலவே காவிமயமாகி விட்டதாகக் கருதப்படுமா என்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
கல்வி என்பது கொள்கை வரைதல், பள்ளி, அல்லது பல்கலைக் கழக மட்டத்தில் நின்று போவதல்ல, அது மனித இருப்பையும் சமூகத்தின் இருப்பையும் விளக்குவதாகும்” என்றார்.