

பகவத் கீதை தொடர்பான போட்டியில் வெற்றி பெற்ற 12 வயது முஸ்லிம் சிறுமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கீதை போட்டியில் வென்ற மும்பையைச் சேர்ந்த மரியம் ஆசிப் சித்திக்கி பிரதமரை சந்தித்தார். அப்போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றுக்கு தலா ரூ.11 ஆயிரம் நிதியுதவியை மரியம் வழங்கினார்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், “சிறுமி மரியமுக்கு பல்வேறு மதங்களின் மீது உள்ள ஆர்வம் அனைத்து இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு மதங்கள் தொடர்பான 5 நூல்களை மோடி பரிசளித்தார்.
‘இஸ்கான்’ சார்பில் சமீபத்தில் நடைபெற்ற பகவத் கீதை போட்டியில் மரியம் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து அவர் பிரதமரை சந்தித்தார். அப்போது, மரியத்தின் பெற்றோர் ஆசிப் நசீம் சித்திக்கி மற்றும் பர்ஹன் ஆசிப் சித்திக்கியும் உடன் இருந்தனர்.