Last Updated : 05 Jun, 2015 09:45 AM

 

Published : 05 Jun 2015 09:45 AM
Last Updated : 05 Jun 2015 09:45 AM

பிஹாரில் காங்கிரஸ், லாலு கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி: சரத் யாதவ் உறுதி

‘‘பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் காங்கிரசுஸுடன் கூட்டணி வைத்து போட்டியிடும்’’ என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிஹார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க, 6 கட்சிகள் இடம் பெறும் `ஜனதா பரிவார்’ கட்சிகள் போட்டியிட முயற்சிகள் நடந்தன. அதன்படி, சரத்யாதவின் ஐஜத, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), முலாயம் சிங்கின் சமாஜ் வாடி உட்பட 6 கட்சிகள் இணைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐஜதவுக்கும் ஆர்ஜேடிக் கும் இடையில் கருத்து வேறுபாடு கள் எழுந்தன. குறிப்பாக முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிப்பதற்கு லாலு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிக தொகுதிகளை லாலு கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், ஜனதா பரிவார் கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று லாலு கட்சியினர் கூறினர்.

இதையடுத்து, காங்கிரஸுடன் ஐஜத கட்சியும், ஐஜத அதிருப்தி தலைவரும் முன்னாள் முதல்வரு மான ஜிதன்ராம் மாஞ்சியுடன் ஆர்ஜேடியும் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐஜத தலைவர் சரத் யாதவ் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிஹார் தேர்தலில் மதவாத கட்சியான பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஜனதா பரிவார் கட்சி தலைவர்கள் ஒருமனதாக உள்ளனர். எனவே, தேர்தலில் ஐஜத வும் ஆர்ஜேடியும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிடும். காங்கிரஸ், ஐஜத, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.

பிஹார் தேர்தலில் ஐஜத - ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கும் என்று கூறுகிறீர்களே, 6 கட்சிகள் இணைந்த ஜனதா பரிவார் கூட்டணி உருவாகாதா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரத் யாதவ் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார்.

முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தை நேற்றுமுன்தினம் சந்தித்து சரத் யாதவ் ஆலோசனை நடத்தினார். அப்போது என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, “அதை ஊடகங்களில் சொல்ல இயலாது’’ என்று சரத் யாதவ் மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x