

"வரும் காலங்களில் வங்கிகள் பெரிய அளவில் வட்டி விகிதங்களைக் குறைக்கும். இதனால் கடன்கள் மீதான மாதத் தவணைத் தொகைகளில் சுமை குறையும்" என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளுடன் ஆண்டு மறுசீராய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:
"மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு அளிப்பது, அதிகபட்சமான வராக்கடன் பிரச்சினைகள், பொருளாதாரத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றை பொதுத்துறை வங்கிகள் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஜனவரி மார்ச் காலாண்டு வாராக்கடன் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. வாராக்கடன் 5.64 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஒரு காலாண்டில் நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. இன்னும் 2-3 காலாண்டுகளுக்கு பிறகுதான் எந்த முடிவுக்கும் நாம் வர முடியும். வங்கியாளர்களும் இன்னும் இரண்டு மூன்று காலாண்டுகளுக்கு பிறகு நிலைமை மேம்படும்.
டிசம்பர் 2014 நிலவரப்படி பொதுத்த்றை வங்கிகளுக்கு ரூ.2,6,0531 கோடி அளவுக்கு வாராக்கடன் உள்ளது. அதேபோல பொருளாதார ஆய்வறிக்கை படி டிசம்பர் மாத இறுதியில் 8,80,000 கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்கள் தேங்கி உள்ளன. நடப்பாண்டில் இதுவரை 0.75 சதவீதம் அளவுக்கு ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.
2015-16ம் நிதி ஆண்டுக்கு 7900 கோடி ரூபாய் பொதுதுறை வங்கிகளின் முதலீட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் இந்த தொகை போதாது, இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக தடைபட்ட திட்டங்களை நிதிச் சேவைகளுக்கான செயலர் கவனித்துக் கொள்வார் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை நாங்கள் நேரடியாக அணுக இருக்கிறோம். இது தொடர்பாக மாநில அரசுகளின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், துறை அதிகாரிகள் தேவைப்பட்டால் நானும் கலந்துக்கொண்டு விவாதித்து பிரச்சினைகளை தீர்க்கப்படும்.
கடன் வட்டி விகிதம் குறைப்பு
மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பில் ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்குச் சென்றுள்ளது. சில வங்கிகள் இன்னும் இதனை மேற்கொள்ளவில்லை. இன்னும் சில வாரங்களில் பெரிய அளவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சில வங்கிகள் தங்களது பேலன்ஸ் ஷீட் மற்றும் சிறு சேமிப்புகளுக்காக அதிக வட்டி அளிக்கப்படுவது குறித்த பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர். ஆனாலும் சூழ்நிலை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது, இதன் மூலம் பொருளாதாரம் நல்ல நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.
மத்திய ரிசர்வ் வங்கி ரிபோ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது, இதனையடுத்து ஸ்டேட் வங்கி உட்பட சில வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தன. ஜனவரி மாதம் முதல் மத்திய ரிசர்வ் வங்கி மூன்று முறை 0.75% வட்டி விகிதக் குறைப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.