

“இணைச் செயலர் மற்றும் உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற தேவையில்லை” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இணைச் செயலர் மற்றும் அதைவிட உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசிடம் சிபிஐ சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் பிரிவு 6(ஏ)-ல் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சிபிஐஎல் என்ற அமைப்பு தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஏ.கே.பட் நாயக், எஸ்.கே.முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
இந்த சட்டப் பிரிவு ஊழல் செய்யும் அதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது. ஊழல் அதிகாரிகளில் ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடு இல்லை. ஊழல் இந்த நாட்டின் எதிரி. அதில் பாரபட்சம் தேவையில்லை. ஊழலை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இருந்து இணைச் செயலர் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை பாதுகாப்பது சட்டத் துக்கு புறம்பானது. இது அரசியல் சாசன பிரிவு 14-க்கு எதிரானது.
ஊழல் செய்தவர் களை அவர்கள் வகிக்கும் பதவியை கருதாமல் சமமாக நடத்த வேண்டும். இதில் பாரபட்சம் காட்டி, சிபிஐ விசாரணையை தடுத்தால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.