

'சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே மீதான குற்றச்சாட்டுகளை எழுப்பியது லலித் மோடியே தவிர காங்கிரஸ் அல்ல' என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சாடியுள்ளார்.
ஜெய்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் பைலட் லலித் மோடி விவகாரத்தில் பிரதமரின் மவுனத்தை கடுமையாக சாடினார்.
'பாதுகாக்க முடியாத' ஒரு விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் ஆகியோரை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்ட, அற, தார்மிக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்க
"பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் காங்கிரஸால் எழுப்பப்பட்டதல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் சட்ட, அற, தார்மீக மதிப்பீடுகளின் படி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசின் அமைச்சர்கள், விசாரணைக் கழகங்களின் தலைமைப் பொறுப்பிலும் இல்லை, நீதிபதிகளும் அல்ல, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள தலைவர்களுக்கு இவர்கள் நற்சான்றிதழ் வழங்கி விடுகின்றனர்.
அரசு தரப்பிலோ, கட்சியின் தரப்பிலோ சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜேவுக்கு எதிராக ஆவணங்கள் இருப்பதை மறுக்கவில்லை. ஆவணங்கள் சரிபார்க்கப்படும் வரை இவர்களை ராஜினாமா செய்யக்கோரி வலியுறுத்தக் கூடாது என்று பாஜக கூறுகிறது, ஆனால் ஆவணங்களை சரிபார்க்க ஒரு மணி நேரம் ஆகுமா?
'நான் லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்கவும் அனுமதிக்க மாட்டேன்' என்ற பிரதமரின் வார்த்தைகள் என்னவாயிற்று? பிரதமர் மோடி தனது அரசியல் மூலதனத்தை இழந்து விட்டார். அவரது கட்சியின் போக்குகள் அம்பலமாகிவிட்டன. இந்த விவகாரம் இப்படியே முடிந்து போக நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் இந்த விவகாரத்தை எப்போதும் எழுப்பிக் கொண்டேயிருப்போம்.
கருப்புப் பணத்தை உருவாக்கித் தந்தவர் லலித் மோடி, சட்டத்தால் தேடப்படும் ஒரு நபர், இவருக்கு பாஜக தலைவர்கள் உதவி புரிந்துள்ளனர். இதுவே சட்டத்துக்கு புறம்பானதுதான்.
பாஜக தலைவர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. ஆனால் பாஜக அவர்களை பாதுகாக்கிறது. அவர்கள் ராஜினாமா செய்வதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம், மேலும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்"
இவ்வாறு கூறினார் சச்சின் பைலட்.