

தெலங்கானா மாநில மேலவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏவுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ உட்பட 4 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் 6 மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தன.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கொடங்கல் தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி என்பவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏ ஸ்டீபன்சனை அணுகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்கும்படியும், அவ்வாறு வாக்களித்தால் ரூ.5 கோடி தருவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டீபன்சன், கடந்த வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஸ்டீபன்சன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்தனர். அந்த வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி இருந்தனர்.
எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஸ்டீபன்சன் வீட்டுக்கு வந்தார். அங்கு, மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முன்பணமாக ரூ. 50 லட்சத்தை ஸ்டீபன்சனிடம் வழங்கினார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரேவந்த் ரெட்டி உட்பட 4 பேரை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இரவோடு இரவாக, ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு அனைவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நேற்று அதிகாலை ரேவந்த் ரெட்டி, செபாஸ்டியன், உதயசிம்மா, மத்தையா ஆகிய 4 பேரையும் ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைவரும் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை மேலவைத் தேர்தல் தொடங்கியது. இதற்கு சிறப்பு அனுமதி பெற்ற எம்எல்ஏ ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வந்தனர். அவர் வாக்களித்த பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே ரேவந்த் ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கறிஞர்கள், நகர சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பதில்மனு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவகாசம் கோரியதால், விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா மாநிலம் முழுவதும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயத்தில் பொய் வழக்கு தொடர்ந்ததாகக் கூறி, தெலங்கானா முதல்வரை எதிர்த்தும், ரேவந்த் ரெட்டியை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தெலுங்கு தேசம் கட்சியினர் தெலங்கானா மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.