தெலங்கானா மேலவை தேர்தல் லஞ்ச வழக்கில் முக்கிய சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு

தெலங்கானா மேலவை தேர்தல் லஞ்ச வழக்கில் முக்கிய சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு
Updated on
1 min read

தெலங்கானா மேலவைத் தேர்தலின் போது ரூ.50 லட்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சிகளின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக அக்கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி ரூ.50 லட்சத்தை டிஆர்எஸ் எம்எல்ஏ ஸ்டீபன் சென்னிடம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் ஆந்திரா தெலங்கானா முதல்வர்கள் இடையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த வழக்கில் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட 4 பேரை தெலங்கானா லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் தெலங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட நரேந்தர் ரெட்டியை நேற்று 5 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் தெலுங்கு தேசம் எம்எல்ஏ வெங்கட வீரய்யாவுக்கு போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். இவர் வீட்டில் இல்லாததால் வீட்டு சுவரில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த நோட்டீஸில் எம்எல்ஏ வெங்கட வீரய்யா நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மேலும் 17 பேருக்கு போலீஸார் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

வாக்குமூலம் பதிவு

இதனிடையே வழக்கின் முக்கிய சாட்சியான டிஆர்எஸ் எம்எல்ஏ ஸ்டீபன் சென்னுடன் அவரது மகன் ஜெஸ்ஸிகா, வீட்டு உரிமையாளர் மார்கம் டெய்லர் ஆகிய 3 பேரை நாம்பல்லி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர் படுத்தினர். இவர்களிடம்3-வது கூடுதல் நீதிபதி திருப்பதி தீவிர விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

இவ்வழக்கில் ஒரு வாக்குக்கு லஞ்சமாக எவ்வளவு பேரம் பேசப்பட்டது? எவ்வளவு முன் பணம் வழங்கப்பட்டது ? தெலுங்கு தேசம் கட்சி சார்பில் யார் யார் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளனர்? இதில் எம்எல்ஏ ரேவந்த் ரெட்டியின் பங்கு என்ன? என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக 5 பக்க வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக தெலங்கானா முதல்வர் மீது ஆந்திர மாநிலத்தில் பதிவாகி உள்ள 87 வழக்குகளை விசாரிக்க டிஐஜி இக்பால் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஆந்திர அரசு நியமித்தது. இந்த வழக்கில் தெலங்கானா முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in