அத்வானியின் அவசர நிலை கருத்தை அலட்சியம் செய்ய முடியாது: சிவசேனா

அத்வானியின் அவசர நிலை கருத்தை அலட்சியம் செய்ய முடியாது: சிவசேனா
Updated on
1 min read

அவசர நிலை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறிய கருத்தை குறைவாக மதித்து அலட்சியப்படுத்த முடியாது என சிவசேனா தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்னாவில், "அத்வானி இந்நாட்டில் மிகப் பெரிய தலைவர். அவர் அரசியலில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் இன்றளவும் அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். அவரை யாரும் எளிதில் ஒதுக்கிவைத்துவிட முடியாது என பாஜக தலைவர்களுக்கும் தெரியும், இந்திய ஊடகங்களுக்கும் தெரியும்.

எனவே, அவசர நிலை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதுகிறேன் என அவர் கூறிய கருத்தை குறைவாக மதித்து அலட்சியப்படுத்த முடியாது.

40 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென அத்வானி அவசரநிலை குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? அவசரநிலை குறித்து அச்சம் தெரிவித்திருக்கும் அத்வானி நிச்சயம் யாரோ ஒருவரை குறிப்பிட்டே பேசியிருக்க வேண்டும். இப்போதும் எழும் மிகப்பெரிய கேள்வி, அவசர நிலை குறித்த பேச்சில் அத்வானி கோடிட்டு காட்டிய அந்த நபர் யார் என்பது மட்டுமே" எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அத்வானி அளித்த பேட்டியில், "ஜனநாயகத்தை நசுக்கக் கூடிய சக்திகளுக்கு இப்போது பலம் அதிகமாக உள்ளது.

அரசியல் சாசனத்தையும் சட்ட வரையறைக்குள் கட்டுப்படாத சக்தி பலம் பொருந்தியதாக உள்ளது. கடந்த 1975 - 77-ம் ஆண்டுகளில் நாட்டில் அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூட குடியுரிமை சுதந்திரத்துக்கு உறுதி அளிப்பதற்கான எந்த செயலும் நடந்ததாக நான் நினைக்கவில்லை. அதேபோன்ற அவசர நிலை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதுகிறேன்.

அதேநேரத்தில் அவசர நிலையை அவ்வளவு எளிதாக யாரும் கொண்டு வந்துவிடவும் முடியாது. ஆனால், அப்படி நடக்காது என்று நான் சொல்ல மாட்டேன். அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்ட காலம் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறேன். ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்ற உறுதி குறைந்து வருகிறது.

அரசியல் தலைமை இப்போது முதிர்ச்சி அடைய வில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், நிறைய குறைகள் இருப்பதால் எனக்கு நம்பிக்கை இல்லை. அவசர நிலை மீண்டும் வராது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in