

ராணுவத்தில் ஒரே பதவி, ஓரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ஏராளமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்தப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து இந்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் இயக்கத்தின் ஊடக ஆலோசசகர் அனில் கவுல் கூறியபோது, நாட்டின் பல்வேறு நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது, எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அண்மையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது, எனினும் இதற்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதே கருத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியபோது, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒரே பதவி ஓரே ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் கணவரை இழந்த 6 லட்சம் பெண்களும் பயன் அடைவார்கள் .
இப்போதைய நிலையில் ராணுவ வீரர் ஓய்வு பெற்ற காலத்தில் அமலில் இருந்த ஊதிய கமிஷனின் பரிந்துரையின்படியே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.