Published : 31 Mar 2014 08:20 AM
Last Updated : 31 Mar 2014 08:20 AM

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புக்கு 2 லட்சம் துணை ராணுவ படை வீரர்கள்: அவசரப் பணிக்காக ஹெலிகாப்டர்கள் தயார்

மக்களவைத் தேர்தலின்போது 2 லட்சம் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் 12-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 24-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

இந்தத் தேர்தலில் 543 மக்களவைத் தொகுதி களிலும் 81.4 கோடி பேர் வாக்குரிமை பெற் றுள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால் வாக்குப் பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நக்ஸல்கள், மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் எம்.ஏ. கணபதி கூறும்போது,

“நாடு முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். நக்ஸல், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்கள், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள ஜம்மு- காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

வீரர்களை அழைத்துச் செல்ல 100 ரயில்கள்

சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பீ., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள்ஸ் ஆகிய துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல 100 ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வீரர்களின் நீண்ட தொலைவு பயணத்துக்கு ரயில்களும் குறுகிய தொலைவுக்கு மற்ற வாகனங்களும் பயன்படுத்தப்படும். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.

இவை தவிர அவசரகாலப் பணிகளுக்காக 12-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. குறிப்பாக தேர்தல் பாதுகாப்பு பணியின்போது காயமடையும் வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்கள் பயன் படுத்தப்படும். இதற்காக விமானப் படையிடம் ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா உள்ளிட்ட 8 மாவட்டங்களும் பிரில் கயை உள்ளிட்ட 5 மாவட்டங்களும் ஒடிசாவில் கோரக்புட் உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மகராஷ்டிரத்தில் கட்சிரோலி மாவட்டம், ஆந்திரத்தில் விசாகப்பட்டினம், கம்மம் மாவட்டங்கள் மாவோயிஸ்ட், நக்ஸல் பாதிப்புள்ளவையாகக் கண்டறியப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x