

மேகி நூடுல்ஸ் மீதான சர்ச்சையைத் தொடர்ந்து, கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழு, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சில விவசாய தோட்டங்களுக்குச் சென்று காய் கறிகளில் உள்ள பூச்சிக் கொல்லி களின் அளவு குறித்து ஆய்வு செய்தது. அதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட பூச்சிக் கொல்லியின் தாக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கேரள உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் டி.வி. அனுபமா கூறியதாவது:
கேரளத்துக்கு வரும் காய்கறிகளை ஆய்வு செய்ய முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழு தமிழகத் தில் நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, கொடைக்கானல் உள்ளிட்ட 9 இடங்களில் சில விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது. அப்போது, அந்த காய்கறிகளில் பூச்சிகொல்லியின் தாக்கம் 3 முதல் 5 மடங்கு வரை அதிகமாக இருப்பது தெரியவந்தது. இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
கேரள மாநிலம் தனது காய்கறித் தேவைகளில் 80 சதவீதத்துக்கு அண்டை மாநிலங்களை நம்பியே இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரு மாநிலங் களின் செயலர் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த கேரளா முடிவு செய்துள்ளது.